கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் நடைபெற்றன. கடந்த 17ஆம் தேதி அதிகாலை கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகாதீப விழாவில், சுமார் 35 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14,000 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில், பழனி, திருப்பதி, திருத்தணி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.