மகளிர் உரிமைத் தொகை திட்டம் 
தமிழ் நாடு

உரிமைத் தொகை - தி.மு.க.வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு!

Staff Writer

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கருத்துக்கூறியுள்ளார். 

”தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் வரவேற்கத்தக்கது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

”தி.மு.க. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னாளில் இத்திட்டத்தைச் செயல்படுத்திய தி.மு.க. அரசு, சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதைப் பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடியே 20 இலட்சத்திற்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும்தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டுவருகிறது.

இத்தகைய சூழலில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால்தான் இப்படியொரு அறிவிப்பை தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான்.” என்று இராமதாசு குறைகூறியுள்ளார். 

”ஆனாலும், தி.மு.க. அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அதன்பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது. அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. ” என்றும் இராமதாசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram