யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்த சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு, இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளித்தது. அதில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு வழக்குகளில் ஜாமீன் பெற தேவையில்லை என்றால், உடனடியாக அவரை விடுதலை செய்யவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.