தமிழ் நாடு

இலங்கையில் வெள்ளம்- கிழக்கு மாகாணத் தமிழர்கள் 70,000 பேர் பாதிப்பு!

Staff Writer

இலங்கையில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை காரணமாக கிழக்கு மாகாணத்தில் குளங்கள், ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து, வெள்ளம் பாய்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் அடைமழையால் அங்குள்ள சேனநாயக்க சமுத்திர அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு அரையடி குறைவெனும் அளவை எட்டியதும், அங்கிருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மாவட்டத்தின் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 14 ஆயிரத்து 827 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 317 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிளகாய், கத்தரி, மரவள்ளிக்கிழங்கு, வெங்காயம், தக்காளி பயிரிடப்பட்டிருந்த தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தின் கிராண், பாலையடித்தோணா, காத்தான்குடி, செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பகுதிகள் வெள்ளநீரில் சூழப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் மட்டும் 24 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பகுதிகளில் 6 பிரதேசங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தொடர்வண்டி நிலையம் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், பொலன்னறுவைவரை ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது.