மசூதிக்குள் சென்று‘ஜெய் சிறீராம்’ முழக்கமிட்ட விவகாரத்தில் நீதிபதியின் அங்கீகாரம் செய்வதா என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
”நேற்று (16.10.2024) நாளேடுகளில் வெளிவந்துள்ள ஒரு செய்தி. மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ என்று கோஷமிடுவதை மத உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகாது என்று கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளாராம். சரி, ஹிந்து கோவில்களுக்குள் சென்று, மற்றொரு மதக்காரர் கோஷம் எழுப்புவது கலவர வித்து அல்லவா? இதை நியாயப்படுத்தி, ‘வேலியே பயிரை மேயலாமா?‘ என்னே விசித்திரம்!” எனக் குறிப்பிட்டுள்ள அவர்,
“இத்தகைய நீதிப் போக்கு விரும்பத்தகாதது ஆகும். உச்சநீதிமன்றம், இத்தகைய மலிவான நீதிப் போக்கிற்கு முடிவு கட்ட முன்வர வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
“மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள், அதன்படி கடமையாற்றுவது அவசியம்! நீதி படும் பாடு விகாரத்துடன் வேதனை பொங்குவதாக இருப்பது மாறுவது எந்நாளோ?” என்றும் வீரமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.