தி.க. தலைவர் கி.வீரமணி 
தமிழ் நாடு

உச்சநீதிமன்ற ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்: கி.வீரமணி

Staff Writer

ஆளுநரின் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவு, பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதுதான்; இனியாவது அவர்கள் இதைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

ஆளுநர்கள் சிலர் - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினர், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட வரைவுகளுக்கு (மசோதாக்களுக்கு) ஒப்புதல் தராமல், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டு, ஏதோ தங்களுக்கே தனி அதிகாரம் இருப்பதுபோல, எதேச்சதிகார மனப்பான்மையுடன் நடந்துகொண்டுவரும் போக்கினை எதிர்த்து, பஞ்சாப், கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தன.

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவியேற்ற தொடக்கத்திலிருந்தே, அவர் ஏதோ ஆளுநர் ஆட்சி (Governor Rule - Article 356) நடைபெறுவதுபோல, அதீதமாக நடந்து கொள்வது அரசியல் அருவருப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளது. இதற்கு டில்லி ஒன்றிய ஆட்சியாளரின் ‘‘சமிக்ஞையும், கண் ஜாடையும்‘’, வெளிப்படையான ஆதரவுமே மூலகாரணம் என்பதை நாட்டில் உள்ள சாதாரண குடிமகனால்கூட புரிந்துகொள்ள முடியும்!

பத்து மசோதாக்களைக் காலவரையின்றி கிடப்பில் போடுவது - அரசு நிர்வாகம் சீர்குலைவு அடையும் வகையில் அன்றாடம் ஓர் அரசின் மூலாதாரக் கொள்கைகளை எதிர்த்து குற்றச்சாட்டுகளைக் கூறுவது, குழந்தைத் திருமணங்களை ஆதரித்து, ஊக்குவிப்பதுபோல, குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் சில நிகழ்வுகளில் நடந்துகொள்வது போன்ற பலவற்றையும் செய்தார்.

பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ‘‘அலங்கார பதவிதான் ஆளுநர் பதவியே தவிர, அவர்களுக்கென தனியே, பிரத்தியேக ஆளுமை செய்யும் அதிகாரம் பெற்றுள்ள பதவி அது அல்ல’’ என்பதையும், ‘‘சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல் அதைச் செய்யும் ‘வீட்டோ பவர்’ (Veto Power) ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது’’ என்று உச்ச நீதிமன்றம் ஓங்கியடித்துக் கூறியிருக்கிறது. இது, அரசமைப்புச் சட்டம் பற்றிய தெளிவுரையாகக் கொள்ளவேண்டிய ஓர் ஆவணமும் சரியான சட்ட விளக்கமும் ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கடந்த 18 ஆம் தேதி கூட்டி, மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி, இரண்டாம் முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு அனுப்பிவிட்ட நிலையில், அதற்கு உடனடியாக ஒப்புதல் (Assent) அளிப்பதைத் தவிர வேறு வழியே தமிழ்நாடு ஆளுநருக்கு இல்லை.

மீறி, வீம்புக்குக் காலதாமதம் செய்தாலோ, வேறு குறுக்குச்சால் ஓட்டினாலோ அடுத்தகட்டமாக உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழ்நாடு அரசு மட்டுமல்ல; தமிழ்நாட்டு அரசினைத் தேர்ந்தெடுத்த அத்துணை வாக்காளர்ப் பெருமக்களும், அமைப்புகளும்கூட தாக்கல் செய்யும் வழக்கு சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுப்பதாகவே அது ஆகிவிடக் கூடும்.

எனவே, ‘‘குளவிக்கூட்டில் கைவிட்டு கலைத்த கதை’’யில் உள்ளவர்களுக்கு இனியாவது தங்கள் உயரம் என்ன? தங்களது அதிகாரம் எந்த அளவுள்ள ஒன்று என்பதைப் புரிந்துகொள்வதும், புரிந்து செயல்படுவதும் அவசரம், அவசியமாகும்!

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை - கருத்தாக்க விளக்க ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அதிகாரம் உள்ள எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தும் ஆணை என்பதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி நடந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனியும் சோதனை வரக்கூடாது.” என்று கி.வீரமணி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.