குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 
தமிழ் நாடு

குளுகுளு பேருந்து நிலையம்…!

Staff Writer

முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் மொத்தமாகக் குவியும் பேருந்துகளை நகரின் பல்வேறு எல்லைகளுக்குப் பிரித்துவிடும் வகையில் பல்வேறு பகுதிகளில் பேருந்து முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே ஆந்திரா,தெலங்கானா மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதிதாகக் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு குத்தம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்க, 25 ஏக்கரில் ரூ. 427 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கடப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் 1,811 இருசக்கர வாகனங்கள், 234 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணியர் பயன்படுத்தும் வகையில் நான்கு லிப்டுகள், நகரும் படிக்கட்டுகள், ஏடிஎம் வசதி, டிக்கெட் முன்பதிவு மையங்கள், மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகளுக்குத் தனி கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 146 ஓய்வு அறைகளும், கர்நாடக மாநில போக்குவரத்து ஊழியர்களுக்கு 60 ஓய்வு அறைகளும் கட்டப்பட்டுள்ளன.

இப்பேருந்து நிலையத்தில் 41 கடைகளும், ஆம்னி பேருந்துகளுக்கு உண்டான பயணச்சீட்டு மையம் ஆகியவைகளுக்காக 8 கடைகள், உணவகங்கள், பாலூட்டும் அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரே நேரத்தில் 30 தனியார் பேருந்துகளும் 70 அரசுப் பேருந்துகளும் இயக்கும் அளவுக்கு இந்த பேருந்து வசதி கொண்டது.

மாநில அளவில் முழுமையாக குளிரூட்டப்பட்ட ஒரு பேருந்து முனையமாக குத்தம்பாக்கம் அமைய உள்ளது. தற்போது வரை 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், 2025 மாா்ச் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக நேற்று பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து தடையற்ற போக்குவரத்து சேவையை வழங்கும் முயற்சியில் சிஎம்டிஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பேருந்து நிலையத்தைச் சுற்றி வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.