சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் கே.ஆர்.ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல மேலும் 3 பேர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி. கங்காபுர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து மூத்த நீதிபதியான ஆர்.மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு நீதிபதி ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகளை கொலீஜியம் மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராமை (கே.ஆர்.ஸ்ரீராம்) நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தது.
அந்த பரிந்துரையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக ஏற்கெனவே மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை பதிவாளராக பணியாற்றி வரும் எம்.ஜோதிராமன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வரும் ஆர்.பூர்ணிமா மற்றும் சென்னை தொழிலக தீர்ப்பாயத்தில் சிறப்பு நீதிபதியாக பணியாற்றி வரும் ஏ.டி.மரியா கிளேட் ஆகிய 3 பேரை நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
அந்த பரிந்துரையையும் ஏற்று இந்த 3 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தலைமை நீதிபதி உட்பட புதிய நீதிபதிகள் விரைவில் பதவியேற்கவுள்ளனர்.