இரண்டு ஆண்டுகள் கூட அரசியலில் அனுபவம் இல்லாதவர் கத்துக்குட்டி அண்ணாமலை என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நேற்று அ.தி.மு.க.வின் பணிக்குழு சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
”நமது தோழமை கட்சியாக இருந்த பா.ஜ.க. நம் வெற்றிக்கு தடையாகவே இருந்தது. இதை நம் தலைவர்கள் புரிந்து கொண்டனர். பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறியதால் அ.தி.மு.க. வெற்றி நடைபோட்டு வருகிறது. பா.ஜ.க. அ.தி.மு.க.வோடு இருந்ததால் காலில் ஒரு கட்டையைக் கட்டிக் கொண்டு ரேசில் ஓடியது போன்று இருந்தது.
இரண்டு ஆண்டுகள் கூட அரசியலில் அனுபவம் இல்லாதவர் கத்துக்குட்டி அண்ணாமலை. ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து நம்மையும் கடித்துவிட்டார். கூட்டணியிலிருந்து கொண்டு ஜெயலலிதாவை விமர்சனம் செய்து கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறிவிட்டார். கண்டன தீர்மானம் நிறைவேற்றியும் அண்ணாமலை திருந்தாமல் அண்ணாவை விமர்சனம் செய்திருக்கிறார். அண்ணாமலைக்கு தைரியம் கொடுத்தது யார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே கண்டபடி பேசி வருகிறார்.
என் மண் என் மக்கள் என்பது தவறான தலைப்பு. அதனை அ.தி.மு.க. ஆதரிக்கக் கூடாது. கர்நாடகாவில் காக்கி சட்டை போட்ட அண்ணாமலைக்கு இந்த மண் சொந்தமா.? நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அவர். ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள், கந்துவட்டிக்காரர்கள் தான் பா.ஜ.க.வில் உள்ளனர். ஏனெனில், பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதால் பாதுகாப்புக்காக அவர்கள் அங்குள்ளனர். பா.ஜ.க.வினர் அண்ணாமலையின் ஆட்டம் பாட்டத்தை விரும்பவில்லை. பா.ஜ.க. எந்த இடத்திலும் டெபாசிட் வாங்காது” என்று நந்தம் விஸ்வநாதன் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.