“கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர்” என்று அவரது நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்த விழாவில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ரூ.100 முகமதிப்பு கொண்ட அந்த நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி துணிச்சல் மிக்க தலைவர். தலைசிறந்த நிர்வாகி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். விளிம்புநிலை மக்களுக்கு தரமான வாழ்க்கை நிலையை கொண்டுவந்தவர். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணியவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட கருணாநிதி நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர்.
மகளிர் உரிமை மற்றும் பிற்படுப்பத்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்காக தீவிரமாக உழைத்தவர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அவரது அரசாங்கம் இயற்றியது. மகளிர் சுய உதவி குழுக்களை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
விவசாயத் தொழிலாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களை உருவாக்கினார். நாட்டின் முன்னேற்றத்தில் அவரது கவனம் இருந்தது. இந்திய ஜனநாயகத்தின் பலம் பன்முகத்தன்மை என்பதை அறிந்தவர். மாநில உரிமைகள் சார்ந்து குரல் கொடுத்தவர். கூட்டாட்சி தத்துவத்தை அறிந்தவர்.
அவர் முதல்வராக இருந்த காலத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தியது. அவரது பார்வை தமிழகத்தில் மட்டும் நின்றுவிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தேசிய வளர்ச்சிக்கு மாநில வளர்ச்சி இன்றியமையாதது என்பதை அறிந்தவர். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள், அதற்காக மேற்கொண்ட பணிகள் முக்கியமானது” என்று ராஜ்நாத் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார்?
“தமிழ்நாடு சட்டமன்றத்தில், தலைவரின் திருவுருவப் படத்தை, அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள திருவுருவச் சிலையை, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை அன்னை சோனியா காந்தி திறந்து வைத்தார்.
முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
இன்று தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நாணயத்தை, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட வருகை தந்துள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கருணாநிதியின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிக மிகப் பொருத்தமானதுதான். எண்பது ஆண்டு காலம் பொது வாழ்க்கையில் இயங்கி, அதில் அரை நூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த தலைவர் கருணாநிதிக்கு, இந்தியாவே வருகை தந்து சிறப்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
தலைவர் கருணாநிதியை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது அவருக்கு செலுத்தப்பட்டுள்ள மரியாதையாக அமைந்துள்ளது. அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வில் பங்கேற்க நான் அழைக்க விரும்பியவர்களில் ராஜ்நாத் சிங் முதல் தேர்வாக இருந்தார். அரசியல் களத்தில் கருத்தியல் ரீதியாக வேறுபட்டு இருந்தாலும் பல்வேறு தரப்பினருடன் நேர்மறை ரீதியாக உறவு பாராட்டுபவர் அவர்.
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதேவேளையில், நாட்டின் பாதுகாப்பு என்று வருகிறபோது கை கொடுத்தவர்தான் கருணாநிதி. நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்குப் பெயரும் நாணயம்தான்! “சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்” என்று சொல்லி, சொன்னதையெல்லாம் செய்து காட்டியது, தலைவரின் நாணயத்துக்கு அடையாளம்! அவரது வழியில் இன்றைய திராவிட மாடல் அரசு - கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கலைஞர் அரசாகச் செயல்பட்டு வருகிறது.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த விழாவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சபாநாயகர் அப்பாவு, கே.என். நேரு, பொன்முடி, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மா. சுப்பரமணியம், சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சகர்களும் டி.ஆர். பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்களும் வைகோ, வீரமணி, தொல். திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், அண்ணாமலை, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், ஜி.கே. மணி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.