முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி, ஆகஸ்ட் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் அவருக்கு நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அவரது 6வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 7ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என தி.மு.க. அறிவித்துள்ளது. காலை 7 மணிக்கு ஓமந்தூரார் வளாகத்தில் பேரணி தொடங்கி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைகிறது. பேரணியில் தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேரணி நிறைவில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.
அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp