மக்களவைத் தேர்தலில் தான் செய்தது தியாகம் அல்ல, வியூகம் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதாக அறிவித்த அவர், இன்று ஈரோட்டிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசுக்கு வாக்குக் கேட்டு அங்குள்ள வீரப்பன்சத்திரம் பகுதியில் அவர் பேசியது:
“ இங்கே நான் பிரச்சாரம் செய்ய வருவதற்குக் காரணம், பாராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்பதுதான். தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று கேட்கிறார்கள். நான் செய்தது தியாகம் அல்ல. தமிழ்நாட்டைப் பாதுகாக்க மேற்கொண்டுள்ள வியூகம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல தலைவர்கள் அடித்தளம் போட்டிருக்கிறார்கள். மக்களின் உழைப்பால் தமிழகம் வளர்ந்திருக்கிறது. மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் தொடங்கினார். எம்ஜிஆர் அதை தொடர்ந்தார். அதன் நீட்சியாக இன்று காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். இதுபோன்ற திட்டங்களுக்கு எல்லாம் மத்தியில் இருந்து உரிமை கொண்டாட முடியாது. இங்கே ஒரு மய்யம் இருக்கிறது. மத்தியில் இருப்பவர்கள் எதையும் சும்மா கொடுத்துவிடவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உழைப்பே, மாநிலத்தின் வளர்ச்சிக்கு காரணம்.
வெளி மாநிலங்களில் இருந்து, குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமானோர் வேலைக்கு வருகிறார்கள் என்று இங்கு ஒரு விமர்சனம் இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன? அங்கு வேலை இல்லை. ஏன் அங்கு வேலை இல்லை என்று கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில், ஒரு ரூபாயில் 29 பைசாவைத்தான் திருப்பிக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களுக்கு ஒரு ரூபாய்க்கு, ஏழு ரூபாய் கொடுக்கிறார்கள். அப்படி இருந்தும் அங்கிருந்து, தமிழ்நாட்டுக்கு கூலி வேலைக்கு ஆட்கள் வருகிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம், இப்படி வரும் எல்லோருக்கும் வேலை கொடுக்கிறது. இந்தப் புகழை ஏற்றுக் கொள்வோம்.
வழக்கமாக தமிழ்நாட்டில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கும் இந்தியப் பிரதமர் மோடி, மழலைத் தமிழில் ஒரிரு வார்த்தைகளை உதிர்ப்பார். அவ்வையாரைச் சுட்டிக் காட்டுவார். ஆனால், அவ்வையார் வேறு மொழியில் பேசியிருப்பாரோ என்று சந்தேகம் எழும் அளவுக்கு, அவரது பேச்சு இருக்கும்.
நான் இங்கே வந்திருப்பது பதவிக்காக அல்ல. எனது கட்சிக்காரர்களின் கவலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, நான் இங்கு வரக் காரணம், நாட்டைக் காக்க வேண்டும் என்ற எண்ணம்தான். இந்த எண்ணம் தமிழனுக்கு எப்போதும் உள்ளது. தேசிய நீரோட்டத்தில் கலக்காத திராவிடக் கூட்டம் இது என்று, மத்தியில் இருப்பவர்கள் பேசுகிறார்கள்.
உண்மையைச் சொல்லுங்கள், வட நாட்டில் கட்டபொம்மன், சிதம்பரம், காமராஜர் என்று யாருக்காவது பெயர் உண்டா? ஆனால், தமிழகத்தில் ஊருக்கு ஊர் காந்தி, நேரு, படேல் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. நீங்கள் இப்போதுதானே படேலுக்கு சிலை வைத்திருக்கிறீர்கள். எங்கள் இதயத்தில் படேலுக்கு சிலை எழுப்பி நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே, தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்று கூறுவது பொய்.
எப்படியாவது இந்த நாட்டைப் பிடிக்க வேண்டும் என்பது வெறி. ஆனால், நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது வீரம். பத்திரிகையாளரையே சந்திக்கப் பயப்படும் ஒருவரிடம் வீரத்தைப் பற்றிப் பேசி என்ன பயன்? யாருக்கும் பயப்படாமல், இப்படி பளிச்சென உண்மையைப் போட்டு உடைக்கிறேன் என்று கேட்கலாம். இதைக் கற்றுத் தந்தது இந்த ஊர்க்காரர்தான். (பெரியார்).
சுதந்திரத்துக்கு முன்பு நம் ஊருக்கு வந்த வெள்ளையனை விரட்டி விட்டோம். ஆனால், இப்போது மேற்கு இந்தியாவில் இருந்து ஒரு கம்பெனி இங்கு வந்திருக்கிறது. குறிப்பாக, காந்தியார் பிறந்த ஊரில் இருந்து இங்கு வந்திருக்கிறது. அதுதான் மேற்கு இந்திய கம்பெனி. எங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டு, ஒரு ரூபாயில் எங்களுக்கு 29 பைசாதான் கொடுக்கிறார்கள். ஆனால், உங்கள் ஊர்க்காரர்களுக்கும் கொடுக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஏனெனில், உங்கள் ஊர்க்காரர்கள் இங்கே கூலி வேலைக்கு வருகிறார்கள். அப்படியானால், எங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டு செல்வது, எங்கேதான் போகிறது.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது, ட்ரோன் மூலமாக கண்ணீர் புகை குண்டு (டியர் காஸ்) வீசுகிறார்கள். விஞ்ஞானத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்தாமல், போராட்டம் நடத்தும் விவசாயிகளை ஒடுக்கப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் மீண்டும் இந்தியைத் திணிக்கிறார்கள். நாங்கள் ஏற்கெனவே இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடியவர்கள். இந்தி தேவைப்பட்டால், நாங்களே கற்றுக்கொள்வோம். எங்கள் மீது திணிக்காதீர்கள். அப்படி திணித்தால் நடப்பதே வேறு. எங்களுக்கு தனித்துவமான மொழி இருக்கிறது. 1950-ம் ஆண்டில் 22 மொழிகளுக்கும் இடம் உண்டு என்று கொடுத்த சத்தியம் என்னவானது?
நாங்கள் மதிய உணவும், காலை உணவும் கொடுத்து குழந்தைகளைப் படிக்கவைத்தபோது, எங்கே முன்னேறி விடுவார்களோ என்று பயந்து, எழுத முடியாத தேர்வை எல்லாம் எங்கள் மீது திணிக்கிறீர்கள்.
உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறையும்போது, இந்திய மக்களுக்கு மட்டும் லாபத்துக்கு விற்றது மத்திய அரசு. அதை நீங்கள் மறந்து விடாதீர்கள். பல ஆண்டுகள் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கிறார்கள். ஈரோட்டில் இருந்து இதை எதிர்க்கிறேன். நாங்கள் போராடிப் பெற்றதை இல்லாமல் செய்ய முற்பட்டால், அதற்கான பதில் தேர்தலில் கிடைக்கும்.
தமிழர்கள் படித்து நீதிபதிகளாகவும், டாக்டர்களாகவும் உருவாகிறார்கள். ஆனால், நீதிபதி தேர்விலும் ஓரவஞ்சனை காட்டுகிறார்கள். வெள்ளம் போன்ற ஆபத்துக் காலங்களில் கூட உதவ மறுக்கிறது ஒன்றிய அரசு. ஒன்றியம் என்று சொன்னால் அவர்களுக்கு கோபம் வருகிறது.
தமிழகத்து கொடுக்க வேண்டிய பாக்கியைக் கேட்டாலும், கொடுத்ததே பிச்சை தானே என்று சொல்கிறது ஒன்றிய அரசு. அதுமட்டுமா, தொடர்ச்சியாக பொய்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
இங்கு வரும்போதெல்லாம் ஒருவர் தமிழ்நாட்டை நேசிக்கிறேன் என்கிறார். ஆனால், பொது சிவில் சட்டத்தை (சிஏஏ) கொண்டுவந்தபோது, எல்லோருக்கும் இடம் கொடுக்கவில்லையே. குறிப்பிட்ட மதத்தவரைக் குறிப்பிடவே இல்லை. அதுமட்டுமா, தமிழர்களைப் பிடிக்கும் என்று கூறுபவர்கள், ஈழத்தில் போரால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்ட தமிழர்களுக்குக்கூட சிஏஏவில் இடம் கொடுக்கவில்லையே? சிஏஏ என்பதே ஓரவஞ்சனைத் திட்டம்தான்.
மத்தியில் ஆள்வோரின் வெறி முழுக்க நாற்காலி மீதுதான் இருக்கிறது. அனைத்து இடங்களிலும் நற்காலி போட்டு உட்கார வேண்டுமென கருதுகிறார்கள். ஆனால், இங்கு அது பலிக்காது. இது கேள்வி கேட்கும் மக்கள் உள்ள மாநிலம். உங்களுக்கு இங்கு நிரந்தர தாற்காலி கிடைக்காது. தமிழ்நாட்டு மக்களின் குரல் பாராளுமன்றத்தில் கேட்க வேண்டும். அதற்கு இந்த தேர்தல் நல்ல வாய்ப்பு.
நாரி சக்தி என்று பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், மணிப்பூரில் என்ன நடந்தது? மணிப்பூரில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்? தமிழன் தேசிய நீரோட்டில் இணைய மாட்டான் என்கிறார்களே, மணிப்பூரில் இருப்பவர்களும் எங்கள் சகோதரிகள்தான். அவர்கள் அவமானப்படுத்தப்படுவதை நாங்கள் வேடிக்கைப் பார்க்க மாட்டோம். மணிப்பூர் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அங்கு போய், நிலைமையைப் பார்த்து வந்தார். எனவேதான், நாடு காக்கும் பணிக்காக இங்கு வந்திருக்கிறேன்.
கறுப்பு பணத்தை இல்லாமல் செய்வோம் என வடை சுட்டார்கள். நானும் நல்ல வடையாக இருக்கும் என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது, அந்த வெறுமனே வாயால் சுட்ட வடை என்று. கறுப்பு பண முதலைகளைப் பிடிப்பேன் என்றார்கள். தண்ணீரில் இருந்த கறுப்புப் பண முதலைகள் தப்பிவிட்டன. ஆனால், மீன்கள் தான் இறந்துவிட்டன. அதாவது, பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். இப்படி இவர்கள் சுடும் வடையைத் தின்றால், வயிற்றுக் கோளாறுகள்தான் ஏற்படும். வடையை சுடுங்கள், ஆனால் சாப்பிடக் கொடுங்கள். காற்றில் சுடாதீர்கள்.
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு மதிய உணவு மட்டுமல்ல, காலை உணவும் வழங்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை கொடுக்கிறார்கள். இதை முதலில் வலியுறுத்தியது நான் என்றாலும், செயல்படுத்தியது எனது சகோதரர்கள். பாஜக அரசுகள் இதை செயல்படுத்தி இருந்தால், நாங்கள் மதித்து இருப்போம். ஆனால் செய்யவில்லை. வட மாநிலங்களில் ஏன் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தவில்லை?
தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாயைப் பெற்றுக் கொண்டு, 29 பைசா தருகிறீர்கள். அதை வைத்துக்கொண்டே இத்தனை திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். ஆனால், 7 ரூபாய் கிடைக்கும் மாநிலங்கள் இவற்றை ஏன் செயல்படுத்தவில்லை. எனவே, 29 பைசாதான் தருவோம் என கிண்டல் அடிக்காதீர்கள். அதேபோல, 29 பைசாவை 20 பைசாவாக்கலாமா என்று யோசிக்காதீர்கள்.
நம் பிள்ளைகள் கல்வி கற்க காலை உணவுத் திட்டம் செயல்படுத்தும் அரசு வேண்டுமா? அல்லது நுழைவுத் தேர்வுகள் என்ற பெயரில் கஷ்டம் கொடுக்கும் அரசு வேண்டுமா? மகளிர் உதவித்தொகை தரும் அரசு வேண்டுமா? அல்லது பில்கிஸ் பானு குற்றவாளியை நடமாடவிட்டு, அவர்களை மாலை போட்டு வரவேற்கும் அரசு வேண்டுமா? விவசாயம் காக்கும் அரசு வேண்டுமா? அல்லது விவசாயிகள் மீது போர் தொடுக்கும் அரசு வேண்டுமா? தொழில்களை ஊக்குவிக்கும் அரசு வேண்டுமா? அல்லது ஜிஎஸ்டி போட்டு சிறு, குறு வியாபாரிகளை நெரிக்கும் அரசு வேணடுமா? அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசு வேண்டுமா? ஜனாதிபதியே ஆனாலும், வெளியே நிறுத்தும் கோயில்களை நடத்தும் அரசு வேண்டுமா?
திமுக அரசு ஏழைகளுக்கான அரசு. அது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டுமென நான் முன்பு விமர்சனம் செய்தேன். ஆனால், அதைவிட மோசமானவர்களிடமிருந்து நாட்டைக் காக்க, திமுகவை ஆதரிக்க வேண்டும். ஆளுநரை அனுப்பி அரசை மிரட்டுகிறார்கள். 29 பைசா மட்டுமே தந்து, அடிவயிற்றில் கை வைக்கிறார்கள். இப்படி நம் மீது கை வைப்பவர்களுக்கு, எதிராக மை வைப்போம். அதை இந்த ஊரில் இருந்து தொடங்குவோம்.
எனக்கு நாற்காலி கேட்டு இங்கு வரவில்லை. எனக்கு மக்கள் மனதில் நாற்காலி உண்டு. சிறு பிள்ளை முதல் 66 வருடங்களாக அதில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு குஷன் நாற்காலி கேட்கவில்லை. இப்போது இருப்பதோ மகிழ்ச்சி. ஆனால், எனக்கு இத்தனை செய்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கினேன். இந்தக் கட்சியின் குரல் நியாயத்துக்காக தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். எந்தக் கட்சி மக்களுக்கு நன்மை செய்தாலும், அதைப் பாராட்டுவதில் தயக்கம் இல்லை. நான் சொன்னதைச் செய்தீர்களே என்று மார் தட்டவில்லை. செய்ததைப் பாராட்டுவோம், இன்னும் செய்ய வேண்டுமெனக் கேட்போம்.
வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டுக்கு செய்திருக்கும் சாதனைகளை நான் பட்டியலிடத் தேவையில்லை. இவர்கள் நிறைய செய்துவிட்டு, வாக்கு கேட்கிறார்கள். ஆனால், இனி செய்வோம் என்று சிலர் கூறுகிறார்கள். இதுவரை ஏன் செய்யவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.” என்று கமல்ஹாசன் பேசினார்.
தொடர்ந்து அவர் கருங்கல்பாளையம், வெப்படை ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.