கள்ளச்சாராயச் சாவுகள் நிகழ்ந்தபோது கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியராக இருந்த சிரவன் குமார் ஜடாவத், ஆட்சிப் பணி அதிகாரிகளின் இன்றைய இடமாற்றத்தில் இடம்பிடித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் 18ஆம்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைநகரிலேயே கருணாபுரம் எனும் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த விவகாரம் வெடிக்கத் தொடங்கியபோது, இவர் அளித்த பேட்டி கடும் சர்ச்சைக்கு உள்ளானது. அதையடுத்து மறுநாளே ஜடாவத் ஆட்சியர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் நியமிக்கப்பட்டார் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
இன்றைய மாற்றத்தில், இராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் அங்கிருந்து பொதுத்துறைத் துணைச்செயலாளராக கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதியும் மாற்றப்பட்டு, சமூக நலத் துறை இணைச்செயலாளராக ஆக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி சுவர்ணா அங்கிருந்து உள்துறையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி ஆட்சியர் அருணா புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரின் இடத்துக்கு ஈரோடு வணிகவரி இணை ஆணையர் இலட்சுமி பாவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் ஆட்சியராக பிரியங்கா, நாகப்பட்டினத்துக்கு சிப்காட் செயலாக்க இயக்குநர் ஆகாஷ்,
அரியலூர் ஆட்சியராக சென்னை வணிகவரி இணை ஆணையர் இரத்தினசாமி, கடலூருக்கு நிதித்துறை துணைச்செயலாளர் ஆதித்ய செந்தில்குமார்,
பெரம்பலூருக்கு தொழில்வணிகத் துறை கூடுதல் ஆணையர் கிரேஸ்,
இராமநாதபுரம் ஆட்சியராக நகராட்சி நிர்வாக இணை ஆணையர் சிம்ரஞ்சீத் சிங் காகுலான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் ஆணையர் பாலச்சந்தர் தாம்பரத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நர்ணவாரே ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.