எரியாத தெரு விளக்குகள், மூடிப்பட்டுள்ள மார்க்கெட்டுகள் என எமர்ஜென்சி காலத்தை தமிழ்நாடு நினைவுபடுத்துவதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த 'என் மண் என் மக்கள்' நடைபயணம் இன்றோடு நிறைவு பெற்றது. அதன் நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னையில் உள்ள தங்க சாலையில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜே.பி.நட்டா பேசியதாவது:
"பிரதமர் மோடியின் மனதில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது. அது வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, அவரது செயல்களிலும் வெளிப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உலகின் எந்த பகுதிக்குச் சென்று உரையாற்றினாலும் தமிழ் மொழி பற்றியும், தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் பேசி வருகிறார்.
தமிழகத்தின் மைந்தன் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்து கெளரவப்படுத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு எத்தகையது என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் நன்றாக உணர்ந்திருக்கிறோம்.
தமிழ்நாடு மிகச்சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். கலை, இலக்கியம், அறிவியல் உள்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு மிகப்பெரிய பங்களித்துள்ளது.
ஆனால் இத்தனை சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு இன்று மிகவும் மோசமான தலைமை அமைந்துள்ளது. தி.மு.க. தலைமையில் இங்கு மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை. இன்று நான் வரும் வழியில் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். யாரையும் வெளியே வர அனுமதிக்கவில்லை. இது எனக்கு எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தியது.
இதுதான் ஜனநாயகமா? இதுதான் தமிழகத்தின் கலாச்சாரமா? இது தமிழகத்தின் கலாச்சாரம் இல்லை என்றால், இத்தகைய நபர்கள் தமிழகத்திற்கு தலைவர்களாக இருக்கக் கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க.வின் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் விரைவில் வர இருக்கிறது." என்று ஜே.பி.நட்டா பேசினார்.