அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

“இது பதவியல்ல… பொறுப்பு…” - துணை முதலமைச்சர் பதவி குறித்து உதயநிதி ட்வீட்!

Staff Writer

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்க உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின், “துணை முதல்வர் என்பது பதவியல்ல, பொறுப்பு” என்று ட்வீட் செய்துள்ளார்.

தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இன்று மாலை 3.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி முன் பதவியேற்க உள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் ஒப்புதல் கோரி கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்துக்கும் ஆளுநர் ஆர்என் ரவி நேற்று இரவே ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சரவை மாற்றத்தின்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் பதவி கொடுத்ததும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

'துணை முதலமைச்சர்' என்பது பதவியல்ல, பொறுப்பு... என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!.. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram