சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வழக்கம்போல காவலர்கள் இன்று காலையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தக் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ரேடியல் சாலையில் ஆட்டோ ஒன்று ஓரம்கட்டி நிறுத்தப்பட்டது.
சந்தேகத்துக்கு உரியபடி அது நிறுத்தப்படவே, அங்கிருந்த தலைமைக் காவலர் ஒருவர் வாகனத்தை நெருங்கி விசாரித்தார். அதிலிருந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதாகவும் கெடுபிடியாக விசாரித்ததில் அவர் கஞ்சாவைக் கடத்தியது தெரியவந்தது.
அவர் நங்கநல்லூரைச் சேர்ந்த 26 வயது அருண் என்பதும் தரமணியில் தகவல்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிவருவதும் உறுதியானது.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு பேருந்தில் கஞ்சாவைக் கடத்திவந்ததாகவும் வாட்சாப் மூலம் சொல்லப்படும் நபரிடம் கஞ்சாவை ஒப்படைத்துவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.