அரசுப் பள்ளி 
தமிழ் நாடு

‘கையில் இருக்கும் கயிறை அறுத்துவிட்டால் சாதி ஒழிந்துவிடுமா?’

தா.பிரகாஷ்

நீதிபதி சந்துரு அளித்த பள்ளிகளில் சாதி பற்றிய அறிக்கையைத் தொடர்ந்து பல விவாதங்கள் முளைத்துள்ளன. அதில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் ஒரே துறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற அரசின் பழைய அறிவிப்பு மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,”ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை, சீர் மரபினர் பள்ளிகள், பழங்குடியினர் பள்ளிகள் என அரசின் பல்வேறு துறைகளின்கீழ் இயங்கிவந்த பள்ளிகள் அனைத்தும் இனி பள்ளிக்கல்வித் துறையின்கீழ் கொண்டுவரப்படும்” என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கு ஆதரவைப் போல எதிர்ப்பும் கிளம்ப, ‘அறிவுச் சமுகம்’ என்கிற குழுவினர், அரசின் முடிவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திவந்தனர். அதில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில், இப்போது நீதிபதி சந்துரு குழு அறிக்கை மீண்டும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், நெல்லையை அடுத்த நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து மாணவர்களிடையிலான வன்முறைகள் குறித்து ஆய்வு செய்யவும் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது தெரிந்ததே!

அந்தக் குழு பத்து மாத ஆய்வுக்குப் பின்னர், அரசிடம் நேற்று தன் அறிக்கையைச் சமர்பித்தது. அதன் முக்கிய பரிந்துரையாக, “பள்ளிகளின் பெயா்களில் இருக்கும் கள்ளா் மீட்பு, ஆதிதிராவிடா் நலன் போன்ற பெயா்களை நீக்கி அரசுப் பள்ளிகள் என்று மட்டுமே குறிப்பிடவேண்டும்.”என்பதும் கூறப்பட்டுள்ளது.

இதைப் பற்றி கல்வித் தளத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு தரப்பினரிடம் பேசினோம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

“நீதிபதி சந்துருவின் 18 பக்க பரிந்துரையைப் படித்தேன். இது ஒரு நிர்வாக ரீதியான அணுகுமுறை. கல்வியல் ரீதியான சமூக சிக்கல்களை உள்வாங்கியதாகத் தெரியவில்லை. சிக்கல்களை மிக மேலோட்டமாகப் புரிந்துகொண்டு செய்யப்பட்டுள்ள பரிந்துரை இது. அரசு ஏற்கெனவே எடுத்திருக்கும் கொள்கை முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார் நீதிபதி சந்துரு.

சாதி வன்கொடுமை நடந்த பெரும்பாலான பள்ளிகள் எந்தப் பள்ளிகள்? அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில்தானே கொடுமைகள் நடந்துள்ளன. நடப்பு நிலவரத்துக்கும் இவரின் பரிந்துரைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

ஆதிதிராவிடர் என்பது சாதியா? அது பொதுச்சொல்தானே! ஆதிதிராவிடர் சாதிச் சொல் என்றால், திராவிடர் என்பது சாதிச் சொல்லா? ஆதி தமிழ்ச் சமூகத்தைக் குறிக்கும் சொல்தான், ஆதிதிராவிடர். இதை நீக்கிவிட்டால் சாதி ஒழிந்துவிடுமா? கையிலிருக்கின்ற கயிறை கட் பண்ணிவிட்டால் சாதி ஒழிந்துவிடுமா?

இந்தப் பரிந்துரை விவாதத்துக்கு உரியது. ஆதிதிராவிடர் – பழங்குடியினர் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் உண்டு. அவர்களுக்கு கொடுக்கக் கூடிய சீருடை, என்.சி.சி., ஸ்கௌட் போன்ற பலவற்றுக்கு நிதி ஒதுக்கீடு உண்டு. இந்நிலையில், ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைத்தால், இந்த உரிமைகள் போய்விடும் அல்லவா? இணைப்பால் இப்படி சில உரிமை இழப்புகள்தான் நடக்கும்.

விடுதிகளைப் பற்றி சந்துரு குழு எதுவும் பேசவில்லை.

இந்தியாவில் அருகமைப் பள்ளிகளைக் கொண்ட ஒரே கட்டமைப்பு, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மட்டும்தான். இது ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு உள்ளேயே இருக்கும். இதை எடுத்துவிட்டால், அந்த மாணவர்கள் மற்ற பகுதியில் உள்ள பள்ளிக்கு எப்படி வருவார்கள்?

எல்லோரும் ஒன்றாகப் படிப்பதற்கான சூழலை ஏற்படுத்தாமல், அருகமைப் பள்ளி பற்றிப் பேசாமல், இந்த பக்கம் இருக்கின்ற மாணவர்கள் அந்தப் பக்கம் வாருங்கள் என்றால், அவர்கள் வந்துசெல்வதற்கான சமூகச் சூழல் உள்ளதா?மத அடையாளத்திற்கும் சாதிய பாகுபாட்டை உருவாக்கும் அடையாளத்திற்கும் வேறுபாடு உள்ளது. சகோதரத்துவத்தை உணர வேண்டிய வயதில் பாகுபாட்டை உருவாக்கும் சாதிய அடையாளம் வேண்டாம் என்பதை மத உணர்வுடன் தொடர்புப் படுத்து அரசியல் உள்நோக்கம் கொண்டது. அத்தகைய வாதத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும்." என வரிசையாக கேள்விகளை அடுக்குகிறார், கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு.

ஒடியன் லட்சுமணன்

இதற்கு மாறான பார்வையை முன்வைக்கிறார், பழங்குடியினர் செயல்பாட்டாளர் எழுத்தாளர் ஒடியன் லட்சுமணன்.

“நீண்ட காலமாக பழங்குடி ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், பழங்குடி அமைப்பினர் வைத்த கோரிக்கைதான். பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பழங்குடியினர் பள்ளிகள் வந்தால் முன்னேற்றங்கள் இருக்கும். தரமான கல்வி கிடைக்கவும், ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே உள்ள சிறப்புச் சலுகைகள் இழப்பதற்கு வாய்ப்பு குறைவு. கூடுதலான சில விஷயங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வந்தால், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிகளைக் கண்காணிப்பார்கள். இப்போது பழங்குடியினர் பள்ளிகளை அந்தத் துறை சார்ந்த அதிகாரிகள்தான் பார்க்கிறார்கள். கல்விரீதியிலான தொடர்பு இல்லாதவர்கள். இதனால், பழங்குடியினர் கல்வியில் முன்னேற்றமும் குறைவு. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.” என்கிறார் ஒடியன் லட்சுமணன்.

பாவெல் பாரதி

“ சீர் மரபினர் பள்ளிகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் பொருளாதார நடவடிக்கையால், பிரமலை கள்ளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதை நேர்செய்யவே இந்தப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. கள்ளர், ஆதிதிராவிடர் போன்ற சொற்கள் சாதியைக் குறிக்கிறது என்றால், அதற்குப் பதிலாக ஏகாதிபத்திய எதிர்பாளர்கள் நலப்பள்ளி என்றும், அறிவுச் சமூக நலப்பள்ளி என்றும் வைக்கலாம். பொது புத்தியிலிருந்து யோசிக்காமல், வரலாற்றுரீதியாகவும், பண்பாட்டுரீதியாகவும் யோசித்து அரசு முடிவெடுக்க வேண்டும். ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றதும் கள்ளர் சீரமைப்புத் துறை மூலமாக தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா ஒரு உண்டு உறைவிடப் பள்ளியை உருவாக்கினார். பொதுப்பள்ளியுடன் கள்ளர் சீர் மரபினர் பள்ளிகளை இணைத்துவிட்டால். இந்த சலுகைகள் கிடைக்குமா? இதனால் சாதி ஒழிந்துவிடுமா? அரசு இன்னும் நல்ல வழிகளை யோசிக்க வேண்டும்.” என்கிறார் கள்ளர் சீரமைப்புப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் எழுத்தாளர் பாவெல் பாரதி.

நீதிபதி சந்துரு குழுவின் இன்னொரு பரிந்துரையை முன்வைத்து, எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

“மாணவ, மாணவிகள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானது என்பதை சந்துரு அவர்கள் உணர்வாரா? கிருஸ்துவ பள்ளிகளில் சிலுவையோ, இஸ்லாமிய பள்ளிகளில் அம்மதச் சின்னங்களோ இடம்பெறக்கூடாது என்று இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டுமல்லவா? பர்தா அணியத் தடைவிதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்க வேண்டுமல்லவா?” என்று கொதிக்கிறார், தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

இதில், அரசு என்ன முடிவு எடுக்குமோ?