திமுக ஆட்சியில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை காவல் துறையினர் தாக்குவதும், என்கவுண்டர் செய்வதும் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
2021ஆ ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இப்போதுவரை 16 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதேபோல், சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பதவியேற்றபின் அடுத்தடுத்த மூன்று என்கவுண்டர்கள் சென்னையில் நடந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக எதிர் கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவா்கள் மீது காவல் துறையினா் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனா்.
தவறு செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் எவரையும் கைது செய்து முறையாக விசாரித்து சட்டத்தின்முன் நிறுத்தி, தண்டணை பெற்றுத் தர வேண்டுமே தவிர, காவல் துறையே நீதிபரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களை கண்மூடித்தனமாக தாக்குவதும், தங்களைக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தாக்கியதாக கூறி என்கவுன்ட்டா் செய்வது போன்ற சூழ்நிலைகள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.” என்று அவா் கூறியுள்ளாா்.