ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை 
தமிழ் நாடு

ஜெகத்ரட்சகன் இடங்களில் வருமான வரி சோதனை: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Staff Writer

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், ஹோட்டல் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

தி.நகரில் உள்ள ஹோட்டல், வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, காஞ்சிபுரம், புதுச்சேரியில் உள்ள மதுபான ஆலை மற்றும் அவர் தொடர்பான அலுவலகங்களிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த வருமான வரித்துறை சோதனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை.

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது, தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கை. விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு. அமலாக்கத்துறை வெளிப்படைத்தன்மையோடும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளதை பா.ஜ.க வசதியாக மறந்துவிடுகிறது. ஆனால், சட்டத்தையும் மக்களாட்சியையும் துச்சமாக மதித்துச் செயல்படுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர்களைத் திட்டமிட்டு பழிவாங்குவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையைக் கண்டு பா.ஜ.க பயப்படுகிறது. அவர்கள், பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.