வெப்ப அலை 
தமிழ் நாடு

42 டிகிரிவரை வெப்பம் தாக்கும் பகுதிகள் எவை - வானிலை மையம் அறிக்கை!

Staff Writer

கோடை வெயில் சுட்டெரித்துவரும் இந்தக் கோடையில் அடுத்த 5 நாள்களும் வெப்பத்தின் தாக்கம் மோசமாகவே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் தாமரைக்கண்ணன் இன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியசாகவும், திருப்பத்தூரில் 41.6 செல்சியசாகவும், சேலத்தில் 41.5, கரூர் பரமத்தி,தருமபுரியில் 41, திருத்தணியில் 40.4, வேலூரில் 40.3, திருச்சியில் 40.1, நாமக்கல்லில் 40 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடலோரப் பகுதிகள், புதுவை, காரைக்காலில் 34-38 டிகிரி செல்சியசாகவும் மலைப்பகுதிகளில் 22-31 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 36.7 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 35.4 டிகிரி என வெப்பம் நிலவியது.

அடுத்த ஐந்து நாள்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்சம் 2 டிகிரி செல்சியஸ்வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சில இடங்களில் 39-42 டிகிரி செல்சியஸ், புதுவை - காரைக்காலில் 35-39 டிகிரி செல்சியஸ் ஆக வெப்ப நிலை உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, ஈரப்பதம் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30- 50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும், கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பமும் ஈரப்பதமும் இருந்தால் அசௌகரியம் ஏற்படும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.