கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த துயரம் மறைவதற்குள், பக்கத்து மாவட்டமான விழுப்புரத்தில் மீண்டும் சாராயப் புழக்கம் வெளிவந்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த 7 பேர், புதுவை மாநில கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரபு ஆகிய தொழிலாளர்கள் புதுவை மாநிலம் மதகடிப்பட்டு கிராமத்திற்குச் சென்று கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து தங்கள் ஊரைச் சேர்ந்த ராஜா, சுரேஷ் பாபு, பிரகாஷ், காளிங்கராஜ் உள்ளிட்டோருடன் சேர்ந்து குடித்துள்ளனர். அடுத்த சில மணி நேரங்களில் 7 பேருக்கும் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரண்டு நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர்களில் 5 பேர் வீடு திரும்பிவிட்டனர்.
மற்ற இருவரும் கல்லீரல் பாதி்ப்புக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பா.ம.க. நிறுவனர் இராமதாசும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என அவர் கேட்டுள்ளார்.
”புதுவையிலிருந்து கொண்டுவரப்படும் கள்ளச் சாராயத்தைத் தடுக்க தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயக் கடத்தலை தடுப்பதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு புதுவை உட்பட்ட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு மது, கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று இராமதாசு தன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.