தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, அதிமுக நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
தமிழ்நாடு போதைப் பொருள் மாநிலமாக உள்ளது என்றும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் மனு கொடுத்தோம். போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் மக்கள் வாழ்க்கை சீரழியும். இளைஞர்கள் , மாணவர்கள் போதைப்பொருளால் பாதிக்கப்படுகின்றனர். இது நீடித்தால் வரும் 7 ஆண்டுகளில் தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கும்.
போதைப்பொருள் கடத்தி வந்த பணத்தை உதயநிதி டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் தந்துள்ளார் என்று கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்திய பணத்தில்தான் திமுக தேர்தலை சந்திப்பதாக செய்திகள் வருகின்றன. போதைப்பொருள் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
இது முழுமையாக விசாரிக்கப்பட்ட வேண்டும் தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிக்கப்பட வேண்டும். ஒரு துளி போதைப் பொருள் கூட விற்பனை செய்யக்கூடாது என அளுநரிடம் கொடுத்திருக்கிறோம்.