நடிகை கஸ்தூரி 
தமிழ் நாடு

‘மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் அடிபணியேன்’ – நடிகை கஸ்தூரி

Staff Writer

“மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்ற என் பிடிவாதம் சகோதர மனப்பான்மையுடன் அறிவுறுத்தியதால் தளர்ந்தது.” என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு கோரி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் தனது பேச்சை திரும்பப் பெறுவாக அறிவித்த கஸ்தூரி தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பும் கோரினார்.

இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் தெலுங்கர்களைப் புண்படுத்தும் எண்ணம் இல்லை என்றும், கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் புண்படுத்தினால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார் கஸ்தூரி. ஆனால் கஸ்தூரியின் பேச்சு தொடர்பாக எழுந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்ற என் பிடிவாதம் சகோதர மனப்பான்மையுடன் அறிவுறுத்தியதால் தளர்ந்தது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தெலுங்கர் என்றோ தெலுங்கு மக்கள் குறித்தோ பேசவேயில்லை இல்லை இல்லை. தெலுங்கு என்று பேசியதை திரும்பப்பெறுகிறேன் பெறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram