இயக்குநர் பா.ரஞ்சித்தை தனக்கு யார் என்றே தெரியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியிருக்கிறார்.
தமிழக முதல்வரின் கனவுத் திட்டமாக கருதப்படும் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று கள ஆய்வில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இயக்குநர் பா. ரஞ்சித் திமுக பற்றி சமீபத்தில் கடுமையான விமர்சனம் வைத்திருக்கிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும்போதே, ‘யார் யார்’ என்று கேட்ட அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்களும் மேயர் பிரியாவும் இயக்குநர் ரஞ்சித் என சொல்ல, ‘அவர் யார்னு எனக்கு தெரியல… எனக்கு அரசியல்வாதியாக இருந்தால் தெரியும்’ என்று பதிலளித்தார்.
மேலும், தி.மு.க.வில் எத்தனையோ முக்கிய தலைவர்கள் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை தருவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சேகர் பாபு, 'எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனும் போது அவர் மற்றொருவரை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் பற்றி பதில் கூற என்ன இருக்கிறது என்றார்.
அம்மா உணவகம் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே பட்டுப் போக இருந்த ஒரு திட்டம். அதை பொலிவுரும் வகையில், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்காக, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினை பாராட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு வஞ்சக எண்ணத்தோடு, குறுகிய புத்தியோடு அதை விமர்சனம் செய்வதை மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அதிமுகவினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.' இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.