முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்து அழைத்து செல்லப்படும் காட்சி 
தமிழ் நாடு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிடிபட்டது எப்படி?

Staff Writer

நில அபகரிப்பு வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது நிலத்தை மோசடி செய்து எழுதி வாங்கிவிட்டதாக எம்.ஆா்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் மீது பிரகாஷ் கரூா் நகர காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதனிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்பிணை கேட்டு கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எம்.ஆா். விஜயபாஸ்கா் தனது வழக்கறிஞா்கள் மூலம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தனது தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி இடைக்கால பிணை கேட்டு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எம்.ஆா். விஜயபாஸ்கரும் அவரது சகோதரரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம், தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி குற்றம்சாட்டப்பட்டவருக்கு இடைக்கால பிணை வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தாா்.

இதையடுத்து, கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான எம் .ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை 20 நாள்களுக்கு மேலாக தேடி வந்த நிலையில், அவர்களை கேரளவில் சுற்றி வளைத்து இன்று கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த எம்.ஆர். விஜய பாஸ்கர் மற்றும் அவரின் குடும்பத்தார், ஆதர்வாளர்களின் செல்போன் நெட்வொர்க்கை கண்காணித்தே சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகத் தெரிகிறது.

எம்.ஆா்.விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram