தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23ஆம் நிதியாண்டில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஊடகத்தினரைச் சந்தித்து இது தொடர்பாக அவர் கூறியது:
“ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்கம் அமைச்சகம் வகுத்திருக்கிற நடைமுறைகளைப் பின்பற்றி நம்முடைய புள்ளியியல் துறை வகுத்திருக்கக் கூடிய அறிக்கையானது இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது. நிலைத்த விலை, நடப்பு விலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைச் சொல்கிறோம்.
நமது பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு வருடங்களில் எந்த அளவிற்கு இருந்தது என்பதை, வளர்ச்சி அடைந்த மற்ற மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
2021-22ஆண்டில் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் 13 லட்சத்து 43 ஆயிரத்து 277 கோடி ரூபாயாகவும், உற்பத்தி மதிப்பு நடப்பு விலையில் 14 லட்சத்து 53 ஆயிரத்து 321 கோடி ரூபாயாகவும் இருந்தது.
2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் 20 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாகவும், உற்பத்தி மதிப்பு நடப்பு விலையில் 23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடி ரூபாயாகவும் உள்ளது.
2021-22 ஆம் ஆண்டு நிதியாண்டில் 7.92 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2022-23ஆம் நிதியாண்டில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டு உற்பத்தி மதிப்பு, நடப்பு விலையில் 2ஆவது இடத்திலும், நிலைத்த விலையில் 3ஆவது இடத்திலும் உள்ளது.
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1 சதவீதம்.
நாட்டின் பிற பகுதிகளைவிட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. இந்தியாவில் தனிநபர் வருமானம் சராசரி 98 ஆயிரத்து 374 ரூபாயாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதைவிட அதிகமாக உள்ளது. இங்கு தனிநபர் வருமானம் ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை வேகம் எடுத்துள்ளது. 2021-22இல் 9.7% ஆக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி, 2022-23இல் 10.4% ஆக அதிகரித்திருக்கிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் விலைவாசி, பணவீக்கம் குறைந்துள்ளது.” என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெயரஞ்சனும் செய்தியாளர்களிடம் பேசினார்.