மதுரையில் விசாகா என்ற பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டாரபாளைம் பகுதியில் விசாகா பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 40 மேற்பட்டோர் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாணவிகள் பரிமளம், சரண்யா ஆகிய இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால், விடுதிகளில் தங்கியிருந்த பல பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் விடுதிக்கு சென்ற மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். முதல்கட்ட விசாரணையில், விடுதியிலிருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விடுதியை நடத்தி வந்த இன்பா என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விடுதியை காலி செய்யக்கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக விடுதி இருக்கும் கட்டடத்தின் உரிமையாளர் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இந்த இடத்தில் விடுதி நடத்த நான் அனுமதி தரவில்லை. வீட்டை காலி செய்ய சொல்லி இன்பா ஜெகதீசனுக்கு ஏற்கெனவே சொல்லிவிட்டேன். அவர் மறுத்துவிட்டதால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். முதலில் அவர்கள் மருத்துவமனை நடத்துகிறேன் என்றுதான் அனுமதி வாங்கினார்கள். விடுதி நடத்த இல்லை. கடந்த இரண்டு வருடமாக வாடகையும் தரவில்லை.” என்றார்.