அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் இரண்டாவது நாளாக நேற்றிரவு கனமழை பெய்தது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்றும், வரும் 14ஆம் தேதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேப் போல திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.