கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையில் அதிக அளவாக கொட்டாரம் பகுதியில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது நேற்று காலை முதல் மாலைவரை பெய்த மழையாகும்.
குமரி மாவட்டத்தில் நேற்று கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலில் மதியம் 12.30 மணிக்கு மழை பிடித்தது. கன்னியாகுமரி, அதைச் சுற்றியுள்ள தென்தாமரைக்குளம், பூவியூர், அகஸ்தீஸ்வரம், முகிலன்குடியிருப்பு, சாமித்தோப்பு, கரும்பாட்டூர், வடதாமரைக்குளம் ஆகிய பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
கன்னியாகுமரியில் கோயில் தெருவில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பகவதி அம்மன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தநிலையில், ஊழியர்கள் அடைப்புகளை நீக்கி வெள்ளத்தை வடியச் செய்தனர்.
கொல்லங்கோடு பகுதி மழையால் ஏலாக்கரை, பாலபாடம், தேனாந்தோட்டம் பயிர்நிலங்களிலும் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது.
குலசேகரம், திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, சுருளக்கோடு ஆகிய இடங்களில் கன மழை அடித்து பெய்தது.
கொட்டாரத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கன மழை கொட்டித் தீர்த்தது. மழையளவு 15.86 செ.மீ. ஆகப் பதிவாகியுள்ளது.