முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

உதயநிதியின் புத்தக அரசியல் - விடாத ‘ஆளுநர் அதிகாரம்’..!

Prakash

விடாது கருப்பு என்பதைப் போல, ஆளுநர் விவகாரத்தை தி.மு.க. எளிதாக விட்டுவிடாது போல!

"என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்தையும் பொன்னாடையும் தவிர்த்து; புத்தகத்தைப் பரிசாக கொடுங்கள்” என்று முதலமைச்சர் ஆவதற்கு முன்னரே, தி.மு.க.வினரிடம் கட்டளையே இட்டார், மு.க.ஸ்டாலின். அதைப் போல, அவரும் யாரைச் சந்திக்கச் சென்றாலும் புத்தகத்தைப் பரிசளிப்பதையே வழக்கமாக்கிக் கொண்டார்.

இப்படி, பிரதமர், குடியரசுத் தலைவர், ஆளுநர் என பலருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த புத்தகங்கள் கவனத்தை ஈர்க்க, சில சமயம் விவாதத்துக்கு உள்ளாகின.

இப்படி புத்தகம் கொடுப்பதும் புத்தகம் பெறுவதும் தி.மு.க.வில் இப்போது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களிடம் ஒரு பழக்கமாகவே உருவாகிவிட்டது. இந்தப் போக்கு அதிகரித்துவரும் சூழலில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சருக்கு வழங்கியுள்ள புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னதாக, உதயநிதி இன்று காலையில் முதலில் தன் பெற்றோரிடம் வாழ்த்துப் பெறச் சென்றார். வாழ்த்துப்பெற வந்த மகனுக்கு ஸ்டாலினும் அவரின் மனைவி துர்காவும் முத்தம் கொடுத்து வாழ்த்தினர். அப்போது, உதயநிதி, மூத்த வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் எழுதிய "குடியரசுத் தலைவர் - ஆளுநர் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள்" எனும் புத்தகத்தை ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை எதிர்த்து தி.மு.க. தரப்பு சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் வழக்காடிவரும் நிலையில், ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பான இந்தப் புத்தகத்தை உதயநிதி பரிசாக வழங்கியிருப்பது, அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதன் மூலம் இன்று சமூக ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளது, ’குடியரசுத் தலைவர் - ஆளுநர் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள்’ புத்தகம். இதன் ஆசிரியர் சிகரம் செந்தில்நாதனிடம் பேசினோம்.

”எந்த எழுத்தாளராக இருந்தாலும் இந்த சம்பவம் மகிழ்ச்சியைத் தரும்.” என்றவர்,

”இந்தப் புத்தகம் இன்றுள்ள அரசியல், சட்ட சூழலில் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது. குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் உள்ள அதிகாரங்கள் பற்றியும், அவர்களின் அத்துமீறல் பற்றியும் இப்போது விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சிகரம் செந்தில்நாதன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் ஆளுநர் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்து, மாநில அரசை முடக்கிப்போடுகிற சூழ்நிலை வந்திருக்கிறது.

அரசியலமைப்பு சட்டம் உருவானபோது, இதுபற்றி அன்று இருந்தவர்கள் என்ன விவாதம் செய்தார்கள், என்னென்ன கருத்துகள் வெளிப்பட்டன என்பதை இன்றைய இளைய சமுதாயத்தினர் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காகத்தான் ”ஆளுநர் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள்" புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சருக்கு இந்தப் புத்தகத்தை வழங்கியதன் மூலம், இந்தக் கருத்து பரவலாக மக்களிடம் சென்றடைவதற்கு வழிவகை செய்யும் என்று நினைக்கிறேன்.” என்றார் சிகரம் செந்தில்நாதன்.

’ஆளுநர் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள்’ என்ற இந்தப் புத்தகம், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.சக்திகுமார் வெளியிட, மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.