இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்துவரும் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி நேற்று மாலை உத்தரவிட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி. இதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இரவே தன் உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளார். மேலும் இது தொடர்பாக தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற இருப்பதாகவும் அவர் அரசுக்குத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
”செந்தில்பாலாஜி மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. தன் அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி சட்டம் மற்றும் நீதியின் நடைமுறைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார். அமலாக்கத்துறை விசாரிக்கும் கிரிமினல் வழக்கில் அவர் இப்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். மேலும் சில ஊழல்தடுப்பு வழக்குகள் அவர் மீது மாநில காவல்துறையில் விசாரணையில் உள்ளன. அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பது வழக்கு விசாரணையைப் பாதிக்கும். அரசியல் சாசன ஒழுங்கை இது குலைக்கக் கூடும். இந்நிலையில் அமைச்சரவையில் இருந்து
செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்’ என ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு கூறியது.
இப்படி ஒரு ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு முதல்வர் அறிவுரை இன்றி ஓர் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வது நவீன இந்தியாவில் இதுவே முதன் முறை.
இந்த அதிரடிக்கு பதிலடியாக, ‘ ஆளுநருக்கு இதற்கெல்லாம் அதிகாரம் கிடையாது. சட்டப்படி இதை எதிர்கொள்வோம்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில்தான் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்பட முடியாது என ஒரு வாதமும் இப்படி நடவடிக்கை எடுக்க சட்டப்படி அவருக்கு அதிகாரம் உண்டு என இன்னொரு வாதமுமாக அரசில் களம் சூடு பிடித்து தகிக்கிறது.
ஆளுநர் உத்தரவு பிறப்பித்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது திமுக அரசுதானே… எப்படி நிறைவேற்றுவார்கள்? என்றும் கேட்கப்படுகிறது.
ஆளுநருக்கும் தமிழக திமுக அரசுக்குமான மோதல் இதன் மூலம் உச்சகட்டத்தை எட்டி விட்டது.
இந்நிலையில்தான் ஆளுநர் மத்திய உள்துறையின் அறிவுறுத்தலின் பேரில் தன் உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளதாகவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெற்று அடுத்தகட்ட தகவல் தன்னிடமிருந்து வரும் வரை இந்த உத்தரவு தள்ளி வைக்கப்படுவதாகவும் முதல்வருக்கு நள்ளிரவில் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.