தமிழ்நாட்டில் நல்ல தலைவர்கள் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பள்ளி இறுதி பொதுத்தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வை நடிகர் விஜய் இன்று நடத்திவருகிறார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வில், அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அரங்குக்கு வந்த விஜய் வரும்போது ’தளபதி தளபதி...’ பாடல் ஒலிக்கப்பட்டது.
விழா மேடைக்கு வந்த விஜய் மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நெல்லை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து படம் எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் விஜய் பேசியது:
”மீண்டும் ஒரு முறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ மாணவிகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இதுபோன்ற நிகழ்வுகளில் நல்ல சில விஷயங்களைச் சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய்யுங்கள். எந்தத் துறையில் தேவை இருக்கிறது என்பதை ஆய்வுசெய்து அதைத் தேர்வு செய்யுங்கள். தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் டாக்டர், இன்ஜினியர், வக்கீல்கள் இருக்கிறார்கள்.... தற்போது நமக்கு நல்ல தலைவர்கள் இல்லை. நல்ல தலைவர்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை. நல்லா படித்தவர்கள் தலைவர்களாக வரவேண்டும். எதிர்காலத்தில் அரசியலும் ஒரு கேரியர் தேர்வாக ஏன் வரக்கூடாது? அதுவும் வரவேண்டும் என்பது என் விருப்பம். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா வேண்டாமா?
மாணவர்கள் படிக்கும்போதே அரசியலில் பங்கேற்கலாம். தினமும் செய்தித்தாள் வாசித்தால் செய்தி வேறு, கருத்து வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.” என்று விஜய் பேசினார்.
தொடர்ந்து பேசியவர், “சமூக ஊடகங்களில் நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் புரணி பேசி கருத்து உருவாக்குவதைக் கவனிப்பீர்கள். அனைத்தையும் பாருங்கள். அதில் எது உண்மை, பொய் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அப்படி தெரிந்துகொள்வதே நல்ல அரசியல்தான். தற்போது சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரசாரத்தை நம்பாமல் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கிய பங்களிப்பைச் செய்யுங்கள்.” என்றும்,
“நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் தவறான பழக்கத்தில் இருந்தால் அவர்களை அதிலிருந்து வெளியேற்ற முயலுங்கள். நீங்கள் அதில் ஈடுபடாதீர்கள். உங்கள் அடையாளத்தை எப்போதும் இழந்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் தற்போது போதைப்பொருள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. எனக்கே அது அச்சமாகதான் இருக்கிறது. ’போதைப் பொருட்களைக் கட்டுபடுத்த வேண்டியது அரசின் கடமை. தற்போது ஆளும் அரசு அதைத் தவறவிட்டுவிட்டது’ என்றெல்லாம் பேசுவதற்கான மேடை இதுவல்ல. சில நேரம் அரசைவிட நமது பாதுகாப்பை நாம் தான் உறுதிப்படுத்த வேண்டும். எனவே உங்களுடைய சுய ஒழுக்கம், சுய கட்டுபாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள்.” என்றும் கூறி,
`Say no to temporary pleasure, Say no to Drugs'” என்று உறுதிமொழி எடுக்கவைத்தார்.
“இந்த உறுதிமொழியை எப்போதும் எடுத்துக்கொள்ளுங்கள். தோல்வியைக் கண்டு பயந்துவிடாதீர்கள். வெற்றி தோல்வி வாழ்வில் சகஜம். வெற்றி என்பது முடிவுமல்ல... தோல்வி தொடர்கதையுமல்ல... வாழ்த்துகள்.” என்று பேசிமுடித்தார் விஜய்.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு, மதிய உணவாக சாதம், கதம்ப சாம்பார், வத்தல்குழம்பு, தக்காளி ரசம், மோர், உருளை காரக்கறி, அவரை மணிலா பொரியல், அவியல், இஞ்சி துவையல், ஆனியன் மணிலா, தயிர் பச்சடி, அப்பளம், வடை, வெற்றிலை பாயாசம் ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.