சட்டப்பேரவையின் வருடாந்திர முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மரபுப்படி ஆளுநர் அரசினது உரையைப் படிக்கவேண்டும். ஆனால், ஆளுநர் இரவியோ கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுவரும் நிலையில், தேசிய கீதத்தையே பாடவேண்டும் என்றும் தான் பல முறை அப்படி கூறியும் பாடாதது உட்பட சில காரணங்களைக் கூறி, ஆளுநர் உரையை தன்னால் படிக்கமுடியாது எனக் கூறி, இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
அதன்பிறகு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். வாசித்து முடித்ததும் அவர் பேசுகையில், “ அவரவருக்கு ஆயிரம் சொந்தக் கருத்துகள் இருக்கலாம். ஆளுநரைப் பொறுத்தவரை இந்த அரசும் முதலமைச்சரும் மரியாதை கொடுத்துவருகின்றனர். இங்கு நான்கூட, ‘(பிரதமர்) பிஎம் கேர் ஃபண்டில் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கிறது. தமிழக பெருவெள்ளத்துக்கு கேட்டு வாங்கித் தரலாமே’ என்று கேட்கலாமா? சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சட்டமன்றம் சற்றும் சளைத்ததில்லை. “ என்று குறிப்பிட்டார்.
அப்பாவு இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோதே, ஆளுநரின் அதிகாரி ஒருவர் பேரவைத்தலைவரின் உரைமேடையைத் தட்டியபடி ஏதோ பேச, “ஜனகனமண..’ பாடியவுடன் செல்லலாமே” என்று அப்பாவு கூறிக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் இரவி தன் இருக்கையிலிருந்து எழுந்து விரைந்து அவையைவிட்டு வெளியேறினார்.