சென்னை மாநகராட்சி 
தமிழ் நாடு

தனியாருக்கு கால்பந்து மைதானம்: பின்வாங்கிய சென்னை மாநகராட்சி!

Staff Writer

சென்னையில் கால்பந்து மைதானங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மாநகராட்சிக்கு சொந்தமான 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டு திடலாக மாற்றி, ஒப்பந்த முறையில் பராமரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த மைதானங்களில் விளையாட ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 என்று கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.2.33 கோடி வருவாய் ஈட்டப்படும் என்று கணக்கிடப்பட்டது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு திமுவின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால், அந்த முடிவை சென்னை மாநகராட்சி நிர்வாகம் கைவிட முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறுவதாக சென்னை மாநகராட்சி இன்றுஅறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது;

மாணவ - மாணவியர்களின் கோரிக்கையினையேற்று, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இவ்விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram