வெள்ள நீர் புகுந்துள்ளதால் வீட்டை வெளியேறும் மக்கள் 
தமிழ் நாடு

மிதக்கும் மதுரை… 70 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்து வாங்கிய மழை!

Staff Writer

மதுரையில் மிக கனமழை பெய்துள்ளதால் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த புயல் வலுவடைந்ததன் காரணமாகவும், காற்றுச் சுழற்சி நகா்வு காரணமாகவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, குமரி என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மதுரையில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கனமழையின் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. கனமழை காரணமாக மதுரை வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி, மதுரை மாவட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

முன்னதாக, மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 45 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

காலை 8.30 முதல் மாலை 5.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 98 மி.மீ. மழை பொழிந்துள்ளது. பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்க போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

மதுரையில் 70 ஆண்டுகளுக்கு பின்னர் அதிக மழை பெய்துள்ளது. கடந்த 1955ஆம் ஆண்டு மதுரையில் 115 மி.மீ. மழை பதிவாகியது. தற்போது 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram