பாடகர் கோவன் 
தமிழ் நாடு

“அதுக்காகவாச்சும் என் மேல வழக்கு போடுங்க முதல்வரே”!

Staff Writer

‘சங்கிகள் வாய் அடைக்க என் மீது வழக்குப் போடுங்கள் முதல்வரே’ என்று மகஇக செயலாளர் கோவன் பேசியுள்ளார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று மாலை திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் மதுவிலக்கை வலியுறுத்தியும் மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களுக்கு எதிராகவும் பாடல்களைப் பாடினர்.

ஆர்ப்பாட்டத்தில் மகஇக செயலாளர் கோவன் பேசுகையில்,

“எல்லோரும் கேட்கிறார்கள், எங்கே போனீர்கள் என்று. ஒருமையில், ‘ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸ்ல உல்லாசம்’ என்று பாடியதற்காக என் மீது அதிமுக ஆட்சியில் தேசத்துரோக வழக்குப் போடப்பட்டது.

தற்போது டாஸ்மாக்கை நடத்துகின்ற திமுக மீது விமர்சனம் வைத்ததற்காக என் மீது வழக்குப் போடவில்லை. இதை வைத்து கோவனைக் காணவில்லை என்கிறார்கள். தயவு செய்து முதல்வர்கள் அவர்களே வழக்குப் போடுங்கள். அப்போதாவது இந்த சங்கிங்க வாயை அடைக்கலாம்.

கண்ணீர் அஞ்சலி, நான் செத்துட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். அதற்காகவாவது என் மீது வழக்குப் போடுங்கள் முதல்வரே” என கோவன் ஆதங்கத்துடன் பேசினார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், கள்ளக்குறிச்சியில் பூரண மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட கோவன், போதைக்கு எதிரான பாடலைப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் தொடர்ந்து மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.