பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி சென்னையில் ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் சரண் அடைந்ததாக முதலில் அறிவிக்கப்பட்ட எட்டு பேரும், பின்னர் கைது செய்யப்பட்டதாக அப்போதைய போலீஸ் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரால் அறிவிக்கப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக மையப் புலனாய்வு அமைப்பு - சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க., பா.ஜ.க. உட்பட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரும் வடசென்னை இணை ஆணையரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, உள்துறைச் செயலாளர் அமுதாவும்கூட மாற்றப்பட்டார்.
வழக்கு விசாரணை தொடர்பாக காவல் எடுத்து விசாரிக்கப்பட்ட குற்றச்சாட்டு நபர் திருவேங்கடம் என்பவர் ஞாயிறன்று காலையில் காவல்துறையால் சூட்டுக்கொலைக்கு ஆளானார். முன்னதாக, அவர் தங்களைத் தாக்கமுயன்றதாக காவல்துறை விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், அதே வழக்கில் மலர்க்கொடி எனும் வழக்குரைஞரும் ஹரிஹரன், சதீஷ்குமார் ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களுடன் சேர்த்து 13 பேர் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்; அவர்களில் ஒருவர்தான் கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மலர்கொடி?
சென்னை திருவல்லிக்கேணி பார்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் சேகர். சென்னையில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்த இவர், அ.தி.மு.க.வின் பிரசார பாடகராகவும் இருந்தார். அவர், 2001இல், மயிலாப்பூர் சிவகுமாரால் கொல்லப்பட்டார்.
சேகரின் மூன்றாவது மனைவி தான் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் மலர்க்கொடி.
இவர் அதிமுகவின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலாளராக இருந்த வந்த நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் ) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(This news story was updated on 11:30 AM, 18-07-2024)