எருமப்பட்டியில் மனிதக் கழிவு வீசப்பட்டதாக பிரச்னை 
தமிழ் நாடு

எருமப்பட்டியில்... என்ன சமூக நீதி? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Staff Writer

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் சுவற்றிலும் சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பதால்தான் இதுபோன்ற இழிசெயல்களை செய்யும் அளவிற்கு சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ”ஏற்கெனவே #வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த இழிசெயல் ஏற்பட்டபோது, அதற்கான உரிய நீதியை இந்த விடியா அரசு நிலைநாட்டியிருந்தால், இன்று இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கு மைக் கிடைத்தாலும் "சமூகநீதி" என்று வாய்கிழிய முழங்கிவிட்டு, அதனை தனது விடியா ஆட்சியில் நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திராவிடத்தின் அடிப்படைக் கோட்பாட்டையே தனது வெற்று விளம்பரத்திற்காக மட்டும் உதட்டளவில் பயன்படுத்தும் முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்வதாகவும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

அரசுப்பள்ளி வளாகத்தில் மனித மலம் பூசியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், அவர்களுக்கு சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram