எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், படகுகளுக்கும் தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
எண்ணூர் பகுதியில் எண்ணெய்க் கசிவு காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னை எண்ணூர் தாழங்குப்பம் சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, திருவொற்றியூர் மண்டல புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐ.ஏ.எஸ். ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அதிகாரி கந்தசாமி கூறியதாவது:
"எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குக் கூடுதலாக தலா 12,500 ரூபாயும் படகுகளுக்கு தலா 10,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்.
தற்போது கணக்கெடுக்கும் பணிகள் முடிந்துவிட்டது. வங்கி தகவல்களைச் சேகரித்து வருகிறோம். அந்த பணிகள் முடிந்த பிறகு, இந்த கூடுதல் தொகை நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஏற்கனவே 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் அது தனி. அதுபோக இவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். இந்த தொகை குடும்பத் தலைவரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இங்குள்ள மக்களின் நிரந்தர வாழ்வாதாரத்தை மீட்கும் வகையிலும் இங்கு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடலில் மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.