தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
வீட்டு வசதி துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது, தனியார் நிறுவனத்திற்குக் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் உள்ளது. இதையொட்டி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகச் சமீபத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில்தான், தற்போது அமலாக்கத்துறை தனியே ஒரு வழக்குப் பதிவு செய்து சோதனையிட்டு வருகிறது. தற்போது வைத்திலிங்கத்திற்குச் சொந்தமான 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் இருக்கும் அவரது வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு சோதனையிட்டு வருகிறது. மேலும், சென்னை தி.நகரில் உள்ளது அவரது மகன் அலுவலகம், அசோக் நகரில் உள்ள அவரது மகன் வீடு, சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.