விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனின் சென்னை, தேனாம்பேட்டை வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுன், தமிழக கூடைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துவருகிறார். அண்மையில், திருச்சியில் நடைபெற்ற வி.சி.க.வின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் அக்கட்சியில் இணைந்தார்.
அதைத் தொடர்ந்து, அவருக்கு வி.சி.க.வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தி.மு.க. அணியில் வி.சி.க.வுக்கு பொதுத்தொகுதி வழங்கப்பட்டால், அதில் ஆதவ் போட்டியிடுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், தேனாம்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். இத்துடன், மேலும் 5 இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.