நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
நாளைமறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பது தேர்தல் விதி. அதன்படி அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இன்று இறுதிக்கட்ட வாக்குச்சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர்.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை, பெசண்ட் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சென்னையின் மூன்று வேட்பாளர்களுக்கும் வாக்குகேட்டு பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் பகுதிகளில் தன் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை நிகழ்த்தினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருவள்ளூர் சந்தைப் பகுதியில் தன் இறுதிப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தான் போட்டியிடும் கோவை மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவுசெய்தார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் தான் போட்டியிடும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்தார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தன் மகன் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சென்னையில் இன்று பிரச்சாரத்தை முடித்தார்.
பிரச்சாரக் கெடு முடிவடைந்துவிட்டதால் இனி யாராவது பிரச்சாரம் செய்தால், அவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதியப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.