மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருப்பதாக விமர்சித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, "தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது. பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்" என்று பேசினார்.
தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை திமுக அரசு எதிர்த்து வரும் நிலையில், தமிழக அரசின் பாடத்திட்டத்தை ஆளுநர் ரவி கடுமையாக விமர்சித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆளுநருக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட மாநில பாடத்திட்டம் மேலானது. மாநில அரசின் கீழ் உள்ள பள்ளி மாணவர்களின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத் திட்டம் அமைந்துள்ளது.
போட்டித் தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மாநில புத்தகங்களிலிருந்துதான் டிஎன்பிஎஸ்சி பயில்வோர் பயன்பெறுகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடம் ஆளுநர் நேரில் சென்று பேச வேண்டும்.
மாநில பாடத் திட்டத்தை படித்து எத்தனை பேர் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தேர்வாகின்றனர் என்பதை தெரிந்துகொண்டு ஆளுநர் பேச வேண்டும். மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே தமிழ்நாட்டில் உள்ள 6 - 12 ஆம் வகுப்பு வகுப்பு பாடப் புத்தகங்களைத்தான் படிக்கின்றனர்.
கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமானால் ஆளுநரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல தயார். போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் அவரே கேள்வி கேட்கட்டும். மாநில பாடத்திட்டத்தின் தரத்தை அறிய ஆளுநர் ஒரு ஆணையத்தை அமைத்து ஆய்வு செய்யட்டும். குலக்கல்வி, மும்மொழிக் கொள்கை என அனைத்தையும் மறைமுகமாக செயல்படுத்தவே மத்திய அரசு முயற்சி செய்கிறது.
கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் இருந்து நிதி பெற மாட்டோம். முதன்மைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முடிவுகளைத் தெளிவாகக் கூறிவிட்டோம். தலைமைச் செயலாளர் மூலம் எழுதப்பட்ட கடிதத்தில் எங்களின் நிலையை விளக்கிவிட்டோம். எஸ்.எஸ்.ஏ திட்டத்திற்கான நிதியை கேட்கிறோம்; பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு நாங்கள் நிதி கேட்கவில்லை" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.