சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சி மேற்கொண்டு வரும் கேரள அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ”தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது.
மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது .
இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனியாவது திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.