சமுதாயத்தால் கூர்ந்து கவனிக்கப்படுகிறவர்களாக இருக்கின்ற மருத்துவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சற்று எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் (Surgeons) மாநாடு (ACRSICON 2024) சென்னை தாஜ் கோரோமண்டல் ஹோட்டலில் கடந்த 19 லிருந்து 21 வரை நடை பெற்றது. நாட்டின் பல மாநிலங்களிருந்து பெரும் மருத்துவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டில் ஒரு நிகழ்ச்சியில், அரங்கத்தில் ஒரு பெண் ஆபாச நடனமாடும் காட்சியும் சில மருத்துவர்கள் கைகளில் மது கோப்பைகளுடன் அந்த பெண்ணுடன் நடனமாடும் காட்சியும் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சிலர் இதை சரியென்றும், சிலர் தவறென்றும் வாதம் புரிந்து வருகின்றனர்.(தேவையில்லை என்று கருதியதால் அந்த காணொளியை நான் பகிரவில்லை)
"டாக்டர் ஐயா, நீங்கள் தான் எங்களுக்கு கடவுள்" என்ற காலமெல்லாம் இப்போது இல்லை என்பது தெளிவான உண்மை. 'மருத்துவ சேவை' என்பது 'மருத்துவ தொழில்' என மாறி நீண்ட காலமாகி விட்டது. மருத்துவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் ஆசைகள், கேளிக்கைகள், விருப்பங்கள் இருக்கத்தானே செய்யும் என்ற சிலரின் வாதம் ஏற்கத்தக்கதே. ஆனால், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், ஆட்சியர்கள், உயர் காவல்துறையினர் என்ற சமுதாய பட்டியலில் இன்றும் மருத்துவர்கள் இருந்து வருகின்றனர். பொது வெளியில் அவர்களின் நடத்தையானது விமர்சிக்கப்படும் என்பது உண்மையே. அவர்களுக்கும் அந்தரங்கம் இருக்கும் என்றாலும், அவற்றை வெளியே தெரியும் வகையில் நடந்து கொள்வது சமுதாய சீர்கேட்டிற்கு வழி வகுக்கும். 'டாக்டரே குடிக்கும் போது நான் குடித்தால் என்ன?' என்று சாதாரண மனிதன் வீண் வாதம் செய்யத்தான் செய்வான்.
அரசியல்வாதிகள், ராணுவ வீரர்கள், மருத்துவர்கள், பெரிய நடிகர்கள், காவல்துறையினர், நீதிபதிகள், விளையாட்டு வீரர்கள் என சமுதாயத்தில் கூர்ந்து கவனிக்கப்படுபவர்கள் சற்றே எச்சரிக்கையோடு தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருக்கத்தான் வேண்டும். தங்களின் முன்மாதிரிகளாக (ரோல்மாடல்களாக) நினைத்துக் கொண்டிருப்பவர்களின் பொது வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் ஒருவரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும்.
அப்படியென்றால் அந்த காலத்தில் மருத்துவர்கள் மது அருந்தியதே இல்லையா, புகை பிடித்ததில்லையா, வேறு எந்த பழக்கமும் இருந்தது இல்லையா? என்பதற்கான பதில், அந்த காலத்தில் தொலைக்காட்சிகள் இல்லை, சமூக ஊடகங்கள் இல்லை, குறிப்பாக அலைபேசிகள் இல்லை என்பதே.
மனிதனாக பிறந்த அனைவரிடத்திலும் ஆசைகள் இருக்கும், விருப்பங்கள் இருக்கும், குறைகள் இருக்கும். தவறில்லை. அவர்களை கட்டுப்படுத்தவும் முடியாது, ஏனென்றால் அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால், இன்றைய உலகில், அலைபேசிகள்(Mobile Phone), பதிவு கருவிகள், புகைப்பட கருவிகள் என்ற நவீன தொழில்நுட்பத்திலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது. ஆகையால் எச்சரிக்கையோடு இருப்பது அவர்களுக்கும் நல்லது, சமுதாயத்திற்கும் நல்லது.
அந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மது அருந்திக் கொண்டே நடனமாடியது குற்றமா? அல்லது அதை படம்பிடித்து பதிவு செய்து சமூக ஊடகங்களில் வலம் வர வைத்த நபர்கள் மீது குற்றமா?
எது சரி? எது தவறு? தொடரும் விவாதங்களும் வியாபாரமே!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.