திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்த சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சரவணன். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் (ஆகஸ்ட் 5) இன்று நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணன், பவுல்ராஜ் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த தேர்தல் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மறைமுக தேர்தலில் முதலில் 53 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் மேயராக இருந்த சரவணன் தாமதமாக வந்ததால், அவரை உள்ளே அனுப்ப அதிகாரிகள் மறுத்தனர். இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரான சுகபுத்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பின்னரே சரவணன் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
இதன்மூலம் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 உறுப்பினர்களில் 54 பேர் மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர். ஒரு செல்லாத வாக்கு பதிவாகியது. வெற்றியை அடுத்து ராமகிருஷ்ணனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
4 அதிமுக கவுன்சிலர்களைத் தவிர்த்து மீதமுள்ள கவுன்சிலர்கள் அனைவருமே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், பவுல்ராஜ் எப்படி 23 வாக்குகள் பெற்றார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.