வி.சி.க. நடத்தவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் ஆளும் தி.மு.க.வும் கலந்துகொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் மு.க.ஸ்டாலினை சற்றுமுன் சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.
தி.மு.க.வின் சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும் அதில் கலந்துகொள்வார்கள் என்று ஸ்டாலின் கூறியதாகவும் அவர் சொன்னார்.
மதுவிலக்கை நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும் எனும் வி.சி.க.வின் கோரிக்கையை உங்களோடு சேர்ந்து தி.மு.க.வும் விரும்புகிறது; நிர்வாகச் சிக்கலைக் கருத்தில்கொண்டு தமிழகத்தில் படிப்படியாக அதை நடைமுறைப்படுத்துவோம் என்று ஸ்டாலின் கூறியதாகவும் திருமா தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என திடீரென திருமா கிளப்பிவிட்ட அரசியல் பரபரப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதைப் பற்றி இந்தச் சந்திப்பில் பேசப்படவில்லை என்றார்.
அ.தி.மு.க.வுக்கு நேரடி அழைப்பு தரவில்லை; தி.மு.க.வுக்கு மட்டும் நேரடி அழைப்பா எனக் கேட்டதற்கு, திருமாவளவன் மறுத்தார். பேசப்பட்ட விவரங்களிலிருந்து தங்கள் தரப்பிலிருந்து 2 பேர் பங்கேற்பார்கள் என்று ஸ்டாலின் சொன்னதாகக் கூறினார்.
அ.தி.மு.க. பக்கம் சாய்வதாகக் கூறப்படுவதைப் பற்றிக் கேட்டதற்கு, “இது வெறும் ஊடக மிகைப்படுத்தல்தான். வி.சி.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்லை. எங்கள் கொள்கை நிலைப்பாட்டை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். அவ்வளவுதான்.” என்றும் திருமாவளவன் கூறினார்.