கோவை மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை வாக்காளர்களுக்குப் பணம் அனுப்புவதாக தி.மு.க. தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தி.மு.க. கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் பழனிசாமி அளித்துள்ள புகார் விவரம்:
” பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அவரது தேர்தல் பணிமனையிலிருந்து வாக்காளர்களுக்கு அலைபேசியின் மூலம் அழைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு ஜி பே மூலம் பணம் அனுப்பிவருகிறார்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியைவிட்டு வேளியேறி இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் நட்டத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை நாடாளுமன்ற பா.ஜ.க. தேர்தல் அலுவலகமான அவினாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கியிருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரியும் ஜிபே மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகிறார்.
கீழ்க்கண்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் பணம் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
(1) சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் @ ஜேபி ( அக்னி எஸ்டேட், அக்னி கல்லூரி உரிமையாளர்)
(2) கரூரைச் சேர்ந்த அவரது மைத்துனர் சிவக்குமார்
(3) பணிமனையில் பணிபுரியும் கிரண்குமார் (வெளியூரைச் சார்ந்தவர்)
(4) பணிமனையில் பணிபுரியும் ஆனந்த் (வெளியூரைச் சார்ந்தவர்)
(5) பணிமனையில் பணிபுரியும் பிரசாந்த் (வெளியூரைச் சார்ந்தவர்)
(6) சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்
எனவே, சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிமாவட்டத்தினரை தொகுதியைவிட்டு வெளியேற்றியும் வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலம் பனம் வினியோகிப்பவர்கள் மீதும் இவர்களை வழிநடத்தும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.