பிராமணர் என அழைக்கப்படுவோர் ஒடுக்கப்படுவதாகவும் அவர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனக் கோரியும் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சைக்கு உள்ளானது.
குறிப்பாக, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கஸ்தூரிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து, அவர் தன் இந்தப் பேச்சு குறித்து செய்தியாளர்களைக் கூட்டி விளக்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா விரிவான பதிலடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ பத்தாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் அனைவரும் சமமாக வாழ்ந்தனர். ஆனால் கடவுளின் பெயரால் பிராமணர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பிரச்னைக்குக் காரணம்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் மைய அரசின் செயலாளர்களில் 90% பேர் பிராமணர்கள். தகுதி இருந்தாலும் மற்ற பிரிவினருக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை. நீதிபதிகளிலும் பெரும்பான்மையினர் உயர் சாதியினர்.
ஒடுக்கப்பட்டவர்கள் உயர்வுக்கு வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் இன்று களங்கத்தை வீசுகிறார்கள். பட்டியல், பிற்படுத்தப்பட்ட சாதியினரை இலஞ்சம் வாங்குவதாக இழிவுபடுத்தினார் முன்னாள் நடிகை கஸ்தூரி. பிராமணர் சமூகம் உயர்வானது என நிலைநிறுத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் குற்றபரம்பரை வர்ணம் அடித்திருக்கிறார்.
ஊடக வெளிச்சத்துக்காக பிற சமூகத்து பெண்களையும் அதிகாரிகளையும் கேவலமாகச் சித்திரிக்கிறார்.
தெலுங்கர்களை மட்டுமல்ல பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தியிருக்கிறார்.
எல்லா சமூகத்தினரையும் போல பிராமண சமூகத்தினரும் இங்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள்.
அரசு, தனியார் என அனைத்து அதிகாரங்களையும் அனுபவித்துக்கொண்டு தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூப்பாடுபோடுவது பட்டியல் மக்களுக்கான சிறப்புச் சட்டங்களைக் கேலிசெய்யும் முயற்சி.
சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவரும் தமிழ் மண்ணில் சமூக அமைதியைக் குலைக்க, ஆர்ப்பாட்டம் எனும் பெயரில் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு பீதியைக் கிளப்புவது உள்நோக்கம் கொண்டது.” என்று இராசா குறிப்பிட்டுள்ளார்.