மக்களவைத் தேர்தல் தொடர்பாகஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது என்று பிரச்னை எழுந்துள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப் பிரதா சாகுவிடம் அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைச்செயலாளர் மதுரைவீரன் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதாகவும் குறிப்பாக வடசென்னை தொகுதி 45ஆவது வார்டில் கடந்த 14ஆம்தேதி பட்டுவாடா செய்யப்பட்டபோது அதைப் பற்றி தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்களும் தி.மு.க.வினரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் என்றும் ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தி.மு.க. நிர்வாகிகளின் தொலைபேசிகளை மைய அரசின் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ. ஆகியவை ஒட்டுக்கேட்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.